காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்


காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
x
தினத்தந்தி 8 May 2022 2:37 AM IST (Updated: 8 May 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தார்கள்.

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தார்கள்.

பா.ஜனதாவில் இணைந்தார்கள்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக 150 தொகுதிககளில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இலக்கு நிர்ணயிக்ககப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் பா.ஜனதா பலப்படுத்த இப்போதில் இருந்தே தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை பா.ஜனதாவில் சேர்க்கும் நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.

அதன்படி, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்தார்கள்.

முன்னாள் மந்திரிகள்

அதன்படி, முன்னாள் மந்திரிகளான வர்த்தூர் பிரகாஷ், பிரமோத் மத்வராஜ், மாலூர் முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சுநாத் கவுடா, முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி, மைசூரு முன்னாள் எம்.எல்.ஏ.வான சந்தேஷ் நாகராஜ், மண்டியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி லட்சுமி அஸ்வின்கவுடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

தனிப்பெரும்பான்மை பலத்துடன்...

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரு சில பகுதிகளில் மக்கள் ஆதரவு இல்லை என்று கூறி வருகின்றனர். எந்த பகுதிகளில் பா.ஜனதா ஆதரவு இல்லை என்று கூறினார்களோ, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், தற்போது பா.ஜனதாவுக்கு வந்துள்ளனர். இதன்மூலம் பா.ஜனதாவுக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது.

 பொதுவாக எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் வெறும் வாக்குறுதி மட்டுமே கொடுப்பார்கள். பா.ஜனதா மட்டுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது. வளர்ச்சி, மக்களுக்கான திட்டம் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் நடந்து வருகிறது.

இதன் காரணமாக இளைஞர்கள் பா.ஜனதாவில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதனால் தான் மாற்றத்திற்காக பா.ஜனதாவுக்கு நிறைய பேர் வருகின்றனர். தற்போதும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டாவின் பலத்தை அதிகரிக்க பிரபலமான தலைவர்கள் பா.ஜனதாவுக்கு வந்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டதேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். அதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் நளின்குமார்கட்டீல் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Next Story