அடுத்த ஆண்டு கோடை விழா நடந்த நடவடிக்கை கலெக்டர் பேட்டி
வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
கலெக்டர் பேட்டி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அரசின் உத்தரவுப்படி நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணி முடிந்ததும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
விமான நிலையம்
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்துக்கு தேவைப்படும் 10 ஏக்கர் கூடுதல் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு கூட்டி நில உரிமையாளர்கள் கேட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பாக வழிகாட்டி மதிப்பை கூட்டுவதற்காக அந்த கோப்பு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 12-ந் தேதி சென்னையில் நடக்கும் வேலூர் விமான நிலையம் தொடர்பான கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி செல்ல உள்ளார். விரைவில் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும். அனைத்து அரசு அலுவலகங்களும் ஆன்லைன் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன்லைன் மூலமாக அளிக்கவும், அதற்கு ஆன்லைன் மூலம் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை விழா நடத்த நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை இல்லாத நிலையை போக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் காட்பாடி மகிமண்டலத்தில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. டைட்டல் பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று 3 ஆக பிரிக்கப்பட்ட பின்னர் வேலூர் மாவட்டத்துக்கு என்று தனியாக சுற்றுலா தலம் இல்லை.
எனவே வேலூர் மாவட்டத்தில் கோடைவிழா நடத்த இடங்களை தேர்வு செய்து வருகிறோம். அடுத்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4 மாதங்களில் அதிகளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் விற்பவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பேட்டியின்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story