‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உயர்த்தி அமைக்கப்படுமா?
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் மலையம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்க்காலின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த இடத்தில் ரோடு வளைவாக உள்ளது. கொஞ்சம் தடுமாறினாலும் வாய்க்காலுக்குள் வாகனங்கள் பாய்ந்துவிடும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயமொழி, ஈரோடு.
வீணாகும் குடிநீர்
கோபியில் செல்லப்பா நகரில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. இங்கு தொட்டியுடன் கூடிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அருகே உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் குழாய் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. கொளுத்தும் கோடையில் தண்ணீர் வீணாவது முறையல்ல. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா?
விஸ்வம், கோபி.
கழிப்பறை சீரமைக்கப்படுமா?
சித்தோடு அருகே கொங்கம்பாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இது மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்பட்டு கிடக்கின்றன. மேலும் இந்த கழிப்பறையில் குடிநீர் குழாயும் உடைந்து உள்ளது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கழிப்பறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
சே.அருண்குமார், கொங்கம்பாளையம்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோபி நகரில் ரைஸ்மில் 4-வது வீதியில் 2 இடங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது அந்த வழியாக செல்பவர்களின் கண் மீது குப்பை தூசு பறந்து சென்று பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் அதிகமான வீடுகளும் உள்ளன. எனவே மேற்படி பகுதியில் 2 இடங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதன், கோபி.
குண்டும், குழியுமான சாலை
கோபி நகராட்சிக்கு உள்பட்ட 11-வது வார்டான ஒட்டரூர் வீதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஒட்டரூர் வீதி, கோபி
பாராட்டு
கோபி கோடீஸ்வரர் நகரில் உள்ள ஒரு வீதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் போடுவதற்காக குழி தோண்டினார்கள். அதில் சிமெண்ட் கலவை பூசி தொட்டி அமைத்து விட்டார்கள். ஆனால் தொட்டி மூடப்படாமல் இருந்தது. இது குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குடிநீர்த் தொட்டிக்கு சிலாப்புகள் போட்டு மூடப்பட்டது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டு்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.
Related Tags :
Next Story