தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் 98 சதவீதம் நிறைவு கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்து உள்ளன என்று கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
தர்மபுரி:
தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்து உள்ளன என்று கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
ஓராண்டு சாதனை
தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு என்ற தர்மபுரி மாவட்ட ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி நேற்று வெளியிட்டார். இதை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
பின்னர் கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒருமுறை நேரடியாக வருகை தந்தும், மற்றொரு முறை காணொலி காட்சியின் வாயிலாகவும் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
புதிய மேம்பாலம்
இதன்படி தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர்-சேலம் மாவட்டம் கோட்டையூர் இடையே ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் 2-வது கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒகேனக்கல் குடிநீர் 2-வது கட்டப்பணிக்கான நிலம் கண்டறிதல், வனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு மாற்று நிலம் வழங்குவதற்கான இடம் கண்டறிதல், திட்ட மதிப்பீடு தயார் செய்தல் மற்றும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய சிப்காட் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவதாக சிப்காட் தொழிற்பேட்டைக்கான நில எடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
சாகச சுற்றுலா மையம்
தர்மபுரி பஸ் நிலையம் ரூ.1½ கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. புதிய புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி ஒப்பந்தபுள்ளி கோரும் நிலையில் உள்ளது. வத்தல்மலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்க சுற்றுலாத்துறைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புதிய பால் குளிரூட்டும் நிலையம், பால் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், உதவி திட்ட அலுவலர் தமிழரசன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story