திருவொற்றியூர் கடற்கரையில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து படகுகள் எரிந்து நாசம்


திருவொற்றியூர் கடற்கரையில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து படகுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 May 2022 11:07 AM IST (Updated: 8 May 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் கடற்கரையில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து படகுகள் எரிந்து சாம்பலானது.

திருவொற்றியூர்,  

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் அம்பி. இவர் சென்னை கடலோர காவல்படைக்கு சொந்தமான பழைய பயன்படுத்த முடியாத 3 ரோந்து படகுகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தில் எடுத்து எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் பலகைத் தொட்டி குப்பம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பகல் 3.50 மணியளவில் படகுகள் அருகே கிடந்த குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது கடல் காற்று வீசியதால் தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோந்து படகில் பற்றி கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதனால் எண்ணூர் விரைவு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். தீ எரிவதை பார்த்த காவலாளி சரவணன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக திருவொற்றியூர், ராயபுரம், எக்ஸ்பிளேனேடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2 கடலோர காவல்படை ரோந்து படகுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story