ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நஷ்டம்: போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நஷ்டம்: போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2022 12:00 PM IST (Updated: 8 May 2022 12:00 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நஷ்டமடைந்ததால் பாதுகாப்பு பணியின் போது ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சிவகங்கை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 30). இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் கடந்த 2013-ம் ஆண்டில் சேர்ந்து வேலை செய்து வந்தார். இவருக்கு ஸ்வேதா என்பவருடன் 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. இவர் தற்போது ஆவடியில் உள்ள பூபொழில் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் இவருக்கு பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சரவணகுமார் பணியில் இருந்த போது, பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சரவணகுமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து நஷ்டமடைந்ததால் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story