ஆன்மிகத்தையும் திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது


ஆன்மிகத்தையும் திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது
x
தினத்தந்தி 8 May 2022 6:14 PM IST (Updated: 8 May 2022 6:14 PM IST)
t-max-icont-min-icon

ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

ரூ.15 கோடியில் சிமெண்டு சாலை

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருவண்ணாமலைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தேரோடும் மாடவீதியில் திருப்பதிக்கு இணையாக சிமெண்டு சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

அதனை நிறைவேற்றும் வகையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

அதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மாடவீதியில் சர்வதேச தரத்தில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். 

தமிழக சட்டமன்ற துணை சபாநாயாகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

 நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் வரவேற்றார். 

சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், திருவண்ணாமலை நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு  காந்தி சிலை அருகில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சாலை மேம்பாட்டு பணிகள்

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்ேபற்றதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 அந்த வகையில் 2021-22 நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு 257.17 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.321 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்துவது, உறுதிப்படுத்துப்படுவது, சிறு பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகப்படியான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி முதல்- அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 32 சாலைகளை 2 வழி சாலையில் இருந்து 4 வழி சாலையாக அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு ஆணையிடப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

ரூ.140 கோடியில் 19.50 கிலோ மீட்டர் தொலைவிற்கு திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை 4 வழி சாலையாக அமைக்கப்பட உள்ளது.

 திருவண்ணாமலையில் இருந்து அரூர் வழியாக தருமபுரியை இணைக்கும் சாலை ரூ.120 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. 

நபார்டு கிராம சாலை திட்டத்தின் மூலம் 146.30 கிலோ மீட்டர் சாலைகளை ரூ.168 கோடி மதிப்பில் செப்பனிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளனர். இந்த ஆண்டு அந்த பணிகள் எல்லாம் நடைபெறுவதற்கு வேண்டிய வேலைகள் நடைபெற்று வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கும், மாதத்தில் 2 நாட்கள் பவுர்ணமி கிரிவலத்திற்கும் ஏராளமான ஆன்மிக பெருமக்கள் வருகை தருகின்றனர். 

எனவே தமிழக முதல்- அமைச்சர் தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாடவீதியில் தரமான சிமெண்டு சாலை ஒரு ஆண்டில் அமைத்து கொடுப்போம் என்று தெரிவித்தார். அதன்படி ரூ.15 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளார். 

இந்த திட்டத்தில் நகராட்சி, மின்வாரியம், வருவாய்த்துறை, தொலைதொடர்புத் துறை ஆகியவற்றை இணைத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

தேரோடும் வீதியில் பெரிய வீதி, ராஜகோபுரம் முன்புறம் உள்ள வீதி, பே கோபுர வீதி அகலமாக உள்ளது. ஆனால் திருவூடல் வீதி குறுகலாக உள்ளது.

 இதில் ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிட வேண்டும். அந்த பாதையில் இருபுறமும் நடைபாதையும், மத்தியில் கான்கிீிட் சாலையும் அமைய உள்ளது.

 நடைபாதைக்கு கீழ் தான் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. பூமிக்கு அடியில்தான்  மின் கம்பிகள் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடியில் தொடங்கியுள்ள இந்த பணிகள் நிறைவு பெறும் போது ரூ.25 கோடியை தாண்டும்.

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு கசக்கிறது. திராவிடம் என்பது நமது மண்ணுக்கு சொந்தம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். 

ஆன்மிகத்திற்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறோம். உதாரணமாக தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் அனைத்து பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

கிரிவலப்பாதையில் உள்ள வியாபாரிகள், ஆன்மிக மக்கள் தங்கள் ஆலோசனைகளை என்னிடம் தெரிவித்தால் அதனை பயன்படுத்திக் கொள்ள தயாராக உள்ளேன். அவற்றை எடுத்துரைத்தால் முதல்- அமைச்சர் அனுமதிப்பார். ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியது. 

திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டம் வளர்ச்சி பெற அனைவரும் ஒத்துழைப்பு அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தி.மு.க. மருத்துவ அணி மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், அருணை கண்ஸ்ட்ரக்‌ஷன் துரை வெங்கட், நகர இலக்கிய அணி அமைப்பாளர் அ.திவாகர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இரா.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், வெற்றி டிஜிட்டல் வக்கீல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story