தென்னை மரங்களை சாய்க்கும் சிவப்புக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி


தென்னை மரங்களை சாய்க்கும் சிவப்புக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி
x
தினத்தந்தி 8 May 2022 7:03 PM IST (Updated: 8 May 2022 7:03 PM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களை சாய்க்கும் சிவப்புக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி

போடிப்பட்டி:
தென்னை மரங்களைச் சாய்க்கும் சிவப்புக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
மகசூல் இழப்பு
இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது'தென்னை சாகுபடியில் காண்டாமிருக வண்டு, ஈரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்கள் மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில் தென்னை மரங்களைச் சேதப்படுத்தி ஒட்டுமொத்த மரத்தையே சாய்த்து வீணாக்கும் சிவப்புக்கூன் வண்டுகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். சிறியது முதல் பெரியது வரை அனைத்து வயதுடைய மரங்களையும் இந்த வண்டுகள் தாக்குகின்றன. குறிப்பாக காண்டாமிருக வண்டுகளால் தாக்கப்பட்ட மரங்களே கூன் வண்டுகளின் இலக்காகிறது. 
காண்டாமிருக வண்டு தாக்குதலால் ஏற்பட்ட துளைகள் அல்லது மரத்தின் தண்டுகளிலுள்ள காயங்களில் தாய் வண்டுகள் முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து வெளி வரும் புழுக்கள், 55 முதல் 60 நாட்கள் வரை தண்டின் உட்புறமுள்ள திசுக்களைத் தின்று உயிர் வாழ்கிறது. அதன்பிறகு தென்னை நாரைக் கொண்டு கூடு பின்னி கூட்டுப்புழுவாக வாழ்ந்து 15 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த வண்டாக வெளி வருகிறது.
இனக்கவர்ச்சிப் பொறிகள்
கூன் வண்டு தாக்குதலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.கூன் வண்டால் பாதிக்கப்பட்ட மரங்களில் துளைகளும், திசுக்களைத் தின்று வெளியே தள்ளப்பட்ட மர நார்களும் காணப்படும். புழுக்கள் உள்ளே சென்ற துளைகளின் வழியே சிவப்பு நிற திரவம் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும். பலமற்ற சூழ்நிலையில் மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்து விழுந்து விடும். இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி, தீயிட்டு அழித்து விட வேண்டும். பச்சை ஓலைகள் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மணலுடன் வேப்பங்கொட்டைத்தூள் 2:1 என்ற வீதத்தில் கலந்து மட்டை இடுக்குகளில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வைக்க வேண்டும். இதன்மூலம் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்புக்கூன் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம். மேலும் ஏக்கருக்கு 2 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து பெண் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மரங்களின் தண்டுப் பகுதியிலுள்ள ஓட்டைகளை சிமெண்ட் அல்லது தார் கொண்டு அடைப்பதன் மூலம் கூன் வண்டுகள் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.இவ்வாறு  அவர் கூறினார்.

Next Story