கோத்தகிரியில் 2 -வது நாளாக நடந்த கண்காட்சி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கோத்தகிரியில் 2 -வது நாளாக நடந்த கண்காட்சி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 May 2022 7:46 PM IST (Updated: 8 May 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியைக் காண 2-வது நாளான ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் செயற்கை நீரூற்றை ரசித்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியைக் காண 2-வது நாளான ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் செயற்கை நீரூற்றை ரசித்தனர்.

கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில், தோட்டக்கலைத் துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறிக் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதிலும் உள்ள பூங்காக்களில் நடத்தப்படுகிறது. இதையொட்டி கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. இந்த காய்கறி கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுமார் 1½ டன் கேரட், முள்ளங்கியை கொண்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த குட்டியுடன் நிற்கும் ஒட்டகச் சிவிங்கி காய்கறி சிற்பம், மலைக் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மீன், வீணை, கடிகாரம், ஊட்டி நிர்மாணிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டேண்ட் காய்கறி சிற்பம் உள்ளிட்டவைகளும் தோட்டக்கலை துறையால் அமைக்கப்பட்டு இருந்தன.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மேலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் அரங்குகளில் மயில், முதலை, பஞ்சவர்ண கிளி, கங்காரு, பாண்டா கரடி, கப்பல், மீன், டோரா உள்ளிட்ட காய்கறி சிற்பங்களை அமைத்து காட்சிப் படுத்தி இருந்தனர். இதுமட்டுமின்றி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு இருந்ததுடன், சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக விழா மேடையில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இந்தநிலையில் காய்கறி கண்காட்சியின் முதல் நாள் சுமார் 5 ஆயிரம் பேர் கண்காட்சியை கண்டு களித்தனர். 2-வது நாள் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் குவிந்ததால் பூங்கா களைக்கட்டியது. 

பரிசுகள் வழங்கிய கலெக்டர்

மேலும் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக பூங்காவை ஒட்டிய சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருந்து, கண்காட்சியைக் கண்டுகளித்து சென்றனர். பூங்காவில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாக கவர்ந்தது. அவர்கள் செயற்கை நீரூற்று, செல்பி ஸ்டேண்ட் மற்றும் காய்கறி சிற்பங்களுக்கு அருகே நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர். மேலும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கோத்தகிரி நேரு பூங்காவில் நடந்த காய்கறி கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி கலெக்டர் அம்ரித் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் சுமார் 4 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக் கிழமை 8 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் கண்காட்சியைக் கண்டுகளிதுள்ளனர்.நீலகிரி மாவட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், கண்ணாடி பாட்டில்களை சாலையோரங்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிக்குள் எறிந்து விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் அளித்து, மலைகளின் அரசியான நீலகிரியை தொடர்ந்து மலைகளின் அரசியாகவே திகழ தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து 2 நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சி நிறைவடைந்தது.

Next Story