வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருப்பு
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்தனர். அவர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரள மாநில பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். எனவே அதிகாலை முதலே அடிவாரம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் பழனியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையம் நிரம்பியது. பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் குவிந்ததன் காரணமாக கோவிலில் உள்ள பொது, கட்டணம், கட்டளை உள்ளிட்ட தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பியது. எனவே தரிசன வழிகளை கடந்து வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்களால் முருகனை தரிசனம் செய்ய முடிந்தது.
இந்நிலையில் அக்னி நட்சத்திர கழு திருவிழா இன்று தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் காலை, மாலையில் கிரிவலம் வந்தனர். பின்னர் அவர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கழு திருவிழா இன்னும் 13 நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story