ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 3 சிறுவர்கள் பலி - டோம்பிவிலி அருகே பரிதாபம்


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
தினத்தந்தி 8 May 2022 8:00 PM IST (Updated: 8 May 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 3 சிறுவர்கள் பலி டோம்பிவிலி அருகே பரிதாபம்

தானே, 
  டோம்பிவிலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துணிகள் துவைப்பு
  டோம்பிவிலி அருகே உள்ள சந்திப் கிராமத்தை சேர்ந்த பெண் மிரா கெய்க்வாட்(வயது55). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் துணிகளை துவைக்க சென்றார். அவருடன் மருமகள் அபிக்சா(30) மற்றும் பேரன்கள் மயூரேஷ்(15), மோக்சா(13), நிலேஷ்(15) ஆகியோர் சென்றனர்.
  மாலை 4 மணி அளவில் மிரா கெய்க்வாட் மற்றும் அபிக்சா கரையில் அமர்ந்து துணிகளை துவைத்து கொண்டிருந்தனர். குவாரி தண்ணீர் அருகே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் மோக்சா தவறி குவாரி தண்ணீரில் விழுந்தான். 
  இதனைக்கண்ட அபிக்சா, மிராகெய்க்வாட் ஆகியோர் அவனை காப்பாற்ற குட்டைக்குள் குதித்தனர். மேலும் உடன் இருந்த மற்ற 2 பேரன்களும் உதவிக்காக தண்ணீரில் குதித்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
  இதில், 5 பேரும் கரையேற முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
  இதுபற்றி அறிந்த கிராம மக்கள், இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், படகு மூலம் அவர்களை தேடி, தண்ணீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
  மேலும் இச்சம்பவம் குறித்து டோம்பிவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story