தீத்தடுப்பு குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து வேறு எங்கும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கண்காணித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் மற்றும் நிலைய அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் தீ விபத்து தடுப்பு கருவிகள் இயங்குகிறதா? பழுது ஏதும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற அமைக்கப்பட்டுள்ள அவசர வழிபாதைகள் பயன்பாட்டில் உள்ளதா? என அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மருத்துவ அலுவலர் அருண்குமார், உதவி மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், கண்காணிப்பாளர் ராஜா, பொதுப்பணித்துறை அலுவலர்கள் ராஜ்குமார், பெத்தபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story