ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது


ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 9:04 PM IST (Updated: 8 May 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே 2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே 2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கணவரை பிரிந்த இளம்பெண்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 42). இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுடைய மகள் மீனா (21). காளியம்மாள் இறந்து விட்டதால், சுடலைமுத்து 2-வதாக முப்பிடாதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மாயாண்டி (20) என்ற மகன் உள்ளார்.
மீனாவும், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டியனும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இசக்கி பாண்டியனுடன் மகன் உள்ளான்.
வெட்டிக்கொலை
பின்னர் மீனா, நாங்குநேரி அருகே பட்டன்பிள்ளைபுதூரைச் சேர்ந்த முத்துவை 2-வதாக காதலித்து திருமணம் செய்தார். இது மீனாவின் தந்தை சுடலைமுத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி தாதன்குளத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு சுடலைமுத்து தனது குடும்பத்தினருடன் சென்று, மீனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மீனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து, அவருடைய மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வீரம்மாள் மகன் முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான சுடலைமுத்து போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
உறவினர்கள் மத்தியில் அவமானம்
முதல் கணவரும், குழந்தையும் இருக்கும்போதே மகள் மீனா 2-வது திருமணம் செய்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. செல்போனில் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்திய மீனா தனது 2-வது திருமண புகைப்படத்தையும் அதில் வெளியிட்டதால், உறவினர்கள் மத்தியில் அவமானமாக கருதினேன்.
இந்த நிலையில் கோவில் விழாவுக்காக வந்த மீனாவிடம், 2-வது திருமணம் செய்ததைக் கண்டித்தேன். ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மகள் என்றும் பாராமல் அரிவாளால் வெட்டினேன். இதில் மீனா இறந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
--

Next Story