கோவில்பட்டி ஆக்கி போட்டியில் விளையாட்டு விடுதி அணி சாம்பியன்
கோவில்பட்டியில் நடந்த ஆக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நடந்த ஆக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
ஆண்கள் ஆக்கி போட்டி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி லீக் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தன. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. நேற்று லீக் போட்டிகள் நடைபெற்றன.
காலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியினரும் இலுப்பையூரணி ஹாக்கி அணியும் மோதின. இதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
விடுதி அணி சாம்பியன்
இரண்டாவது அரையிறுதிப் போட்டி திட்டங்குளம் பாரதி ஹாக்கி அணியினரும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 4 -1என்ற புள்ளி கணக்கில் தாமஸ் நகர் ஹாக்கி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியும், தாமஸ் நகர் ஹாக்கி அணியும் மோதின. இதில் 7 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.மேலும் மண்டல அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இறுதி போட்டியில் முருகன், கார்த்திக் ராஜா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
பரிசளிப்பு விழா
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story