கோவில் திருவிழாவையொட்டி 75 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்


கோவில் திருவிழாவையொட்டி 75 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 8 May 2022 9:47 PM IST (Updated: 8 May 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் கெங்கையம்மன், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 75 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 75 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில் திருவிழா

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்த கோவில்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் சிரசு திருவிழா வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதேபோன்று அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழா நாளை மறுதினம் (புதன்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மற்றும் வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது வேலூர் மாவட்டத்தில் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே 2 கோவில் திருவிழாவிற்கும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

75 சிறப்பு பஸ்கள் இயக்கம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா, வல்லண்டராமம் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர், குடியாத்தத்தில் இருந்து வல்லண்டராமத்துக்கு தலா 20 பஸ்கள் என்று மொத்தம் 40 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி வேலங்காட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

 பஸ்நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
அதேபோன்று வேலூர்-குடியாத்தம் வழித்தடத்தில் இருமார்க்கமாக தற்போது 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிரசு திருவிழாவையொட்டி அந்த வழித்தடத்தில் கூடுதலாக 25 சிறப்பு அரசு பஸ்களும், ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 10 சிறப்பு பஸ்களும் என்று 35 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story