மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் -அண்ணாமலை பேட்டி


மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் -அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 8 May 2022 9:58 PM IST (Updated: 8 May 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார்.


கோலார் தங்கவயல்:

தங்கவயலில் கால் பதித்துள்ளேன்

  கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பிரிச்சர் சாலையில் பா.ஜனதா பொது கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

   தங்கவயலில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இந்த மண்ணில் கால் பதிப்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கர்நாடகத்தில் நான் 22 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். இருப்பினும் என்னால் தங்கவயலுக்கு வர முடியாமல் போய்விட்டது. 

ஆனால் தற்போது தமிழக பா.ஜனதா தலைவராக கால் பதித்துள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. தங்கவயல் என்றாலே தமிழர்கள் பகுதி என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அந்த அளவிற்கு தமிழ் மக்கள் உள்ளனர். இங்கு தமிழ் உணர்வு அதிகம் உள்ளவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

மேகதாது விவகாரம்

  மூடிக்கிடக்கும் தங்கச்சுரங்கத்தை திறக்க முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.எச்.முனியப்பா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்முறையாக கோலார் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா உறுப்பினர் தங்கச்சுரங்கத்தை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

   அவரது முயற்சி பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாமல் பா.ஜனதா அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பா.ஜனதா அரசு மக்கள் நலனே எங்கள் லட்சியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு நாங்கள்(தமிழக பா.ஜனதா) கட்டுப்படுவோம்.

மதுரை ஆதீனம்

  தமிழகத்தில் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதை பார்த்து கொண்டு பா.ஜனதா அமைதியாக இருக்காது. 2 ஆயிரம் ஆண்டு இதிகாசம் கொண்ட ஆதீனத்தை 70 ஆண்டு இதிகாசம் கொண்ட தி.மு.க. அழிக்க நினைப்பது நியாயமில்லை.
  மதுரை ஆதீனத்திற்கு பா.ஜனதா துணையாக இருக்கும். சுதந்திர இந்தியாவை சுமார் 60 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆண்டது. அப்போது கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கத்தை காங்கிரஸ் கட்சியினர் கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் தங்கச்சுரங்கத்தை மூடிவிட்டனர்.

பிரதமர் மோடி படம்

  தங்கச்சுரங்கத்தை மூடி சுமார் 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. தங்கச்சுரங்கம் மூடப்பட்டதால் அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய, மாநில காங்கிரஸ் நிராகரித்தது. தற்போது தங்கச்சுரங்க தொழிலாளர்களின் நலனுக்காக சுரங்கத்தை மீண்டும் திறக்க பிரதமர் நரேந்திர மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

  ஆனாலும் தங்கச்சுரங்க அலுவலகத்தில் பிரதமர் மோடியின் உருவப்படம் இல்லை. அங்கு முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடன் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். பல நாட்டு தலைவர்கள், பிரதமர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளி நாட்டில் சீனா நாட்டு வெளியுறவுத்துறை பெண் தூதருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
   இவ்வாறு அவர் கூறினார்.


Next Story