வெளிநாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், எச்சங்கள்


வெளிநாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், எச்சங்கள்
x

வெளிநாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், எச்சங்கள் கலெக்டரிடம் ஆராய்ச்சியாளர் வழங்கினார்.

பெரம்பலூர்
கடல்சார் உயிரினங்கள் மற்றும் புதைபடிமங்கள் குறித்து ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ் என்பவர் பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், எச்சங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் வழங்கினார். அப்போது ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரியவந்தது. சாத்தனூரில் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அதுமட்டுமல்லாது சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு கிடைக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று கடல்சார் உயினங்கள் குறித்தும், புதை படிமங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்யும் பணியில் உள்ள நான் என்னிடமுள்ள மடகாஸ்கார் நாட்டில் சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் தலைக்காலி 5 படிமங்கள், பொலிவியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள் டிரைலோபைட்ஸ்படிமம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல் சுறாவின் பல் படிமங்கள் போன்றவற்றை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மோநைட்ஸ் படிமங்களுக்கென்றே புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் வழங்கியுள்ளேன். இந்தியாவிலேயே அம்மோநைட்ஸ் எனப்படும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த கடல்சார் உயிரினத்திற்கென்று பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை, என்றார்.

Next Story