மாணவிகளை தொட்டு பேசியதாக புகார்; அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்


மாணவிகளை தொட்டு பேசியதாக புகார்; அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 8 May 2022 11:50 PM IST (Updated: 8 May 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மாணவிகளை தொட்டு பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியம் ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் திருக்கோவிலூரை சேர்ந்த திருவிக்ரமன் (வயது 52) என்பவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று திருவிக்ரமன் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர்  மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்ததோடு, பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர். 

பணியிடைநீக்கம்

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் முகையூர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் ஆடூர் கொளப்பாக்கம் அரசு பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி மாணவிகள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர். 

இதனிடையே தொடர் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் திருவிக்ரமனை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story