நெல்லை மாவட்டத்தில் 2,167 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


நெல்லை மாவட்டத்தில் 2,167 மையங்களில்  கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 May 2022 12:28 AM IST (Updated: 9 May 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 2167 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நெல்லை:
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
முதல் தவணை தடுப்பூசியை நெல்லை மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை இதுவரை 64 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். 2.5 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2,167 முகாம்கள்
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 2,167 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. நெல்லை மாநகர பகுதியில் சுமார் 800 சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் சிறப்பு முகாம் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 12,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சி 4 மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் நேற்று காலை 142 இடங்களிலும், பிற்பகலில் 142 இடங்களிலும் என மொத்தம் 284 இடங்களில் முகாம் நடைபெற்றது. மாநகர பகுதிகளில் 18 வயதுக்கு மேல் தகுதி உடைய 4 லட்சம் பேரில் இதுவரை முதல் தவணை 90 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேரும், 15 முதல் 17 வயது பள்ளி செல்லும் மாணவர்களில் முதல் தவணை 98 சதவீதம் பேரும், 2-வது தவணையை 65 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.
வீரவநல்லூர்
வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.  பேரூராட்சி தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் வசந்தசந்திரா, சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சிதம்பரம், அனந்தராமன், ஆறுமுகம், கல்பனா மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story