பவானிசாகர் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


பவானிசாகர் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 May 2022 3:30 AM IST (Updated: 9 May 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மின் தடை
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுத்தம்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு மரம் சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன்காரணமாக மின்தடை ஏற்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதி இருளில் மூழ்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் நேற்று இரவு வரை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மின் துண்டிப்பை சரி செய்ய மின் வாரிய ஊழியர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. 
சாலை மறியல்
இதனால் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் ஒன்று திரண்டு நேற்று இரவு 7.30 மணி அளவில் அங்குள்ள கொத்தமங்கலம் - சத்தியமங்கலம் சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும், மின்தடையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றி அறிந்ததும், பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதியில் மின் இணைப்பை சீர் செய்து மின்சாரம் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில்  சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story