ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அரசு நெல் கொள்முதல் திறக்க கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அரசு நெல் கொள்முதல் திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2022 6:13 PM IST (Updated: 9 May 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அரசு நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும், என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா காசிலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி பரமசிவன் என்பவர் இருமுடி போல் நெல் கட்டி தலையில் வைத்துக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நான் காசிலிங்கபுரத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த ஆண்டு எங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்து 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. மேலும், அந்த நெல்லை விற்பனை செய்வதற்காக மணக்கரை அரசு கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து 1½ மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த நெல் விற்பனை செய்ய முடியவில்லை. ஆகையால் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எந்தவித தாமதமும் இன்றி நெல் கொள்முதல் நிலையத்தை இயக்கி, நெல்லை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
மின்வாரிய அலுவலகம்
தூத்துக்குடி புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், முத்தையாபுரம் வடக்கு மின் வினியோக பிரிவு அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக முத்தையாபுரத்தை மையமாக கொண்டு ஜெ.எஸ்.நகரில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை முத்தையாபுரம், அத்திமரப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 800 மின் நுகர்வோர்களும், தெர்மல்நகர், காதர்மீரான் நகர், முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 900 நுகர்வோர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த அலுவலகம் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் மக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் மீண்டும் முத்தையாபுரத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
ஆக்கிரமிப்பு
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நேரடி வாரிசுகள் வீமராஜா, வீரசக்கம்மாள் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாஞ்சாலங்குறிச்சி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் நடைபெறும் சட்ட விதிமீறல்களை தடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும், என்று கூறி உள்ளனர்.
ஏரல் தாலுகா கொற்கை அக்கசாலையை சேர்ந்த சுயம்பு அம்மாள் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது கடைசி மகன் முத்துக்கண் (வயது 37). விவசாய தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 17.1.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை விபத்தில் இறந்ததாக ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகம் உள்ளது. ஆகையால் எனது மகன் இறப்பில் உள்ள உண்மை நிலை குறித்து உரிய புலன் விசாரணை நடத்த வேண்டும், என்று கூறி உள்ளார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஆஷ்துரை நினைவகத்தை அகற்றி அந்த இடத்தில் வ.உ.சி.யின் சுதேசி நேவிகேசன் கப்பல் கம்பெனி அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
ஊரக வேலை
தூத்துக்குடி அருகே உள்ள பேய்க்குளம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்களுக்கு சாயர்புரம் பேரூராட்சியில் ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் வழங்க மறுக்கிறார்கள். ஆகையால் எங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் கீழபுத்தனேரி ஊர்த்தலைவர் மனோகரன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை, தெருக்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் ஊருக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகையால் பொதுப்பாதை மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவளம் கடற்கரை பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எந்தவிதமான அரசு திட்டங்களும் கிடைக்கவில்லை. ஆகையால் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். வேலைக்காக பிற ஊர்களில், வெளிமாவட்டங்களில் சேர்ந்து சென்று வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அங்கும் போதிய வருவாய் இல்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கே வேலை கிடைக்கும். எனவே இந்த ஆலையை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

Next Story