வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
காந்தல் முக்கோணம் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி
காந்தல் முக்கோணம் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அதன்படி எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமி நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- முத்துசாமி நகர் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் குடியிருப்புகளும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் தெரிவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வீட்டுமனை பட்டா
இதேபோன்று வீரத்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் வந்து காந்தல் முக்கோணம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- குருசடி காலனி, இந்திரா காலனி, கஸ்தூரிபாய் காலனி, சலவை தொழிலாளர்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 30 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. மின்சார வசதி கிடையாது, வீட்டு வரி ரசீது வழங்கவில்லை. இதனால் எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டது. அதன்படி 9 பேருக்கு மட்டுமே வீட்டு வரி ரசீது மற்றும் பட்டா கிடைத்தது. 25-க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனவே அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story