ஊராட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி


ஊராட்சி பெண் கவுன்சிலர்  குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 May 2022 8:56 PM IST (Updated: 9 May 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், 
போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி தொங்குட்டிப்பாளையம் ஊராட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2 தம்பதி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவர்கள் மீது ஊற்றினார்கள்.
கொலை மிரட்டல்
விசாரணையில், அவர்கள் பொங்கலூர் ஒன்றியம் தொங்குட்டிப்பாளையம் டி.ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36). இவருடைய மனைவி கார்த்திகா (32). ஆனந்தகுமாரின் தம்பி பிரகாஷ். அவருடைய மனைவி சுகன்யா மற்றும் அவர்களின் 2 குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதில் கார்த்திகா தொங்குட்டிப்பாளையம் ஊராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
ஆனந்தகுமாரின் தந்தை மாரிச்சாமி தொங்குட்டிப்பாளையத்தில் 1985-ம் ஆண்டு 8 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி அங்கு வீடு கட்டியுள்ளார். அனைவரும் கூட்டுக்குடும்பமாக அங்கு வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் 2 பேர் போலி ஆவணங்களை தயாரித்து 8 சென்ட் நிலத்தை அவர்களின் பெயரில் கிரையம் செய்துள்ளதாகவும், தற்போது வீடுகளை காலி செய்யச்சொல்லி கொலைமிரட்டல் விடுப்பதுடன் நேற்று (நேற்று முன்தினம்) வீட்டில் இருந்த ஆனந்தகுமாரின் தாயாரை தாக்கியதாகவும் தெரிவித்தனர். 
கண்ணீருடன் முறையீடு
அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ள நிலையில் மீண்டும், மீண்டும் தொந்தரவு செய்து மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கதறி அழுதபடி கோரிக்கை வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து கலெக்டரிடம் கண்ணீருடன் முறையிட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story