அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 8:56 PM IST (Updated: 9 May 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் என அரசுத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இதில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அமைச்சக சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story