மெட்ரோ ரெயில் பாதை தூணில் கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து
பெங்களூருவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ ரெயில் பாதை தூணில் கர்நாடக அரசு பஸ் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், 29 பயணிகள் படுகாயம் அடைந்தார்கள்.
பெங்களூரு:
மெட்ரோ ரெயில் பாதை தூணில் மோதிய பஸ்
குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து கர்நாடக அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி) பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் மஞ்சுநாத் ஓட்டினார். கண்டக்டராக வெங்கடரமணா இருந்தார். அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை 2 மணியளவில் பெங்களூரு கெங்கேரி அருகே மைசூரு ரோட்டில் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள மெட்ரோ ரெயில் பாதை தூணில் மோதி நின்றது. இதன் காரணமாக பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் மஞ்சுநாத், கண்டக்டர் வெங்கடரமணா படுகாயம் அடைந்தனர். மேலும் 27 பயணிகளும் பலத்தகாயம் அடைந்தார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் கெங்கேரி போக்குவரத்து போலீசார் விரைந்து பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
4 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை
படுகாயம் அடைந்த 29 பேரில் 4 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக அவர்களை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து இருந்தனர். அதிகாலை என்பதால், தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி மெட்ரோ ரெயில் பாதை தூணில் பஸ் மோதி இருப்பதாக கூறப்படுகிறது. அரசு பஸ் மோதியதில் தூணுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
ஆனால் சாலையில் பெரிய பள்ளம் இருந்ததாகவும், பள்ளத்தில் பஸ் ஏறி இறங்குவதை தவிர்க்க முயன்ற போது மெட்ரோ ரெயில் பாதை தூணில் பஸ் மோதி விட்டதாக டிரைவர் மஞ்சுநாத் போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கெங்கேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story