5 வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் 5 வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
ராஜினாமா கடிதம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, சின்னமனூர் ஒன்றியம் சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் குமார், செல்லம்மாள், மன்மதன், இலக்கியா, ராதா ஆகிய 5 பேர் வந்தனர். அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, 5 பேரும் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் உறுப்பினர்களாக பதவி ஏற்ற நாள் முதல் எந்த பிரச்சினையையும் ஊராட்சியில் விவாதிக்க முடியவில்லை. இதுவரை எங்களிடம் எந்த வரவு, செலவு கணக்குகளையும் காட்டவில்லை.
துணைத்தலைவர் தேர்வு
கடந்த 1-ந்தேதி கிராமசபை கூட்டத்தின் போது வரவு, செலவு மற்றும் ஊராட்சியில் நடக்கும் வேலைகள் குறித்து கேட்டபோது கூட்டத்தில் நிராகரித்து விட்டனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்த வேல்முருகன் உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்து விட்டார். தற்காலிக துணைத்தலைவரை தேர்வு செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் ஊராட்சி பிரச்சினையில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா செய்யப்போவதாக கலெக்டரிடம் கடிதம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story