காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
உடுமலை:
உடுமலை ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. அத்துடன் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உடுமலை ரெயில் நிலையம்
திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் உடுமலையும் ஒன்றாகும். இந்த நிலையில் பொள்ளாச்சி-திண்டுக்கல்லுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில்பாதை கடந்த 2009-ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளால் அப்போது 5 ஆண்டுகளாக உடுமலை வழியாக ரெயில்கள் இயக்கப்படாமலிருந்தது. அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உடுமலை வழியாக இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
உடுமலை ரெயில் நிலையத்தில் நல்லதண்ணீர் (சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்) பயணிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலைய வளாகத்தில், அலுவலகத்தின் வெளிப்பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது.
ரெயிலில் வரும் பயணிகள் அங்கு சென்று தண்ணீர் பிடித்துவரமுடியாது. அதனால் ரெயில் நிலைய அலுவலகத்தின் வெளிப்புறம் உள்ள குடிநீர் குழாயை அலுவலகத்தின் உள்புறம் உள்ள ரெயில்வே வளாகம் வரை குழாய் அமைத்து நீட்டித்து அங்கு குடிநீர் தொட்டி வைத்தால் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
கிணற்று தண்ணீர்
இந்த ரெயில் நிலையத்திற்கு அருகில் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர்தான் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. 2018-2019 நிதி ஆண்டில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது.
அதில் 4 குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்துவந்தது. ஆனால் இந்த எந்திரம் பழுதாகி 2ஆண்டுகள் ஆகிறது. இது பராமரிப்பு இல்லாமல் பயன்பாடின்றி, காட்சிப்பொருளாகவே உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 2 இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களுக்கு, ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குடிநீர் சுத்திகரிக்கப்படாத குடிநீர் என்று கூறப்படுகிறது. இந்த கிணறு உள்ள பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். அதில் சிலர் காலி மதுபாட்டில்களை அந்த கிணற்றில் போட்டு விடுகின்றனர்.
இந்த நிலையில் ரெயில் நிலைய பகுதியிலும் குடிமகன்களின் அட்டகாசம் உள்ளது. இரவு நேரத்தில் பிளாட்பாரம் பகுதியில் குடித்துவிட்டு குடிநீர் குழாய்களை பிடித்து ஆட்டுகின்றனர். இதில் 2இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளதால் அவை பயன்படுத்த முடியாதபடி உள்ளது. அதனால் தண்ணீர் விரயமாவதை தவிர்க்க, அந்த 2 குழாய்களும் கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
அதனால் 2 இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது. அந்த 2 குழாய்களிலும் தண்ணீர் வருகிறது. உடுமலை ரெயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடாக உள்ளது. அதனால் ரெயில் பயணிகள் உடுமலை ரெயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணிகள் எதிர்பார்ப்பு
அதனால் உடுமலை ரெயில் நிலையத்திற்கு நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும், ரெயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுதுபார்த்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story