வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்
தேனி அருகே பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது.
தேனி:
வீரபாண்டி திருவிழா
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
திருவிழா நாட்களில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த திருவிழாவில் அமைக்கப்படும் என்பதால் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் இந்த திருவிழாவில் பங்கெடுப்பது தனிச்சிறப்பு. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் வீரபாண்டியே களைகட்டியுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள்
இந்த விழாவுக்காக கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் அருகில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களுக்கான திடலில் வழக்கமாக 15 வகையான ராட்டினங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு 28 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், சேத்தாண்டி வேடம் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதற்காக கோவில் அருகில் மண்பானைகள், ஆயிரங்கண் பானைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக வீரபாண்டியில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்காலிக கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகள் போன்றவை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் 1,200 போலீசார் இந்த திருவிழா பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோவில் உள்புற வளாகம், வெளிப்புற வளாகம், பொழுது போக்கு திடல் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story