விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 May 2022 10:41 PM IST (Updated: 9 May 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

மேல்மலையனூர் தாலுகா தேப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 66), இவருடைய மனைவி ராணி (55). இவர்கள் இருவரும் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு திடீரென தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று, அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜூ கூறுகையில், எங்கள் நிலத்தின் அருகில் குடியிருந்து வந்த தசரதன் (75) என்பவர் எங்கள் நிலத்தை அவர்களது வழிக்காக கிரையம் செய்து கொடுக்கும்படி கேட்டு வந்தார். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தசரதன், கடந்த மார்ச் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை நான் அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக அவரது குடும்பத்தினர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் சமூகவிரோத கும்பல், எங்களை மிரட்டி எங்களுடைய மருமகன்களிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறித்துக்கொண்டனர். இதுபற்றி அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து இங்கு வந்துள்ளோம் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story