நிவாரண நிதியை கலெக்டரிடம் அளித்த அரசு பள்ளி மாணவர்கள்
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அரசு பள்ளி மாணவர்கள் சேகரித்த நிவாரண நிதியை கலெக்டரிடம் கொடுத்தனர்.
விழுப்புரம்,
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளான 6-ம் வகுப்பு மாணவிகள் சிந்துஜா, ஜெலினா, அனுஷ்கா, 8-ம் வகுப்பு மாணவர் சபரி, 4-ம் வகுப்பு மாணவன் ஆதவன், 3-ம் வகுப்பு மாணவி ரக்ஷிகா ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக உண்டியல் மூலம் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் நிதி திரட்டினர். கடந்த ஒரு வாரமாக இம்மாணவ- மாணவிகள் உண்டியல் மூலம் திரட்டிய நிவாரண நிதியான ரூ.4,500-ஐ நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் மோகனை சந்தித்து ஒப்படைத்தனர். உடனே கலெக்டர் மோகன், தனது பங்கிற்கு அந்த மாணவ- மாணவிகளின் உண்டியலில் நிவாரண நிதி உதவி அளித்து அவர்களிடம் இருந்து உண்டியல்களை பெற்றுக்கொண்டதோடு மாணவ- மாணவிகளின் சேவை மனப்பான்மையை வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story