விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகனூர்:
அரசு கல்லூரி
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் லத்துவாடி கணவாய்பட்டியில் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் நாமக்கல், மோகனூர், ராசிபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1971-ம் ஆண்டு மாணவர்கள் விடுதி கட்டப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி, படித்து வருகிறார்கள். தற்போது இந்த விடுதி போதிய பராமரிப்பின்றி உள்ளது. மேலும் விடுதி கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டம்
விடுதி கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அச்சத்துடனே விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை மாணவ-மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விடுதி கட்டிடத்தை சீரமைக்கக்கோரியும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
மாணவர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதவள்ளி, கல்லூரி முதல்வர் முருகன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பாஸ்கர், மோகனூர் தாசில்தார் தங்கராஜ், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் விடுதி கட்டிடத்தை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து, உரிய அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் மாணவ-மாணவிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story