‘பார்வையற்ற மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’-கலெக்டரிடம் பெண் கோரிக்கை
மின்னல் தாக்கி கணவர் இறந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி கண்பார்வையற்ற மகன், மகளுடன் வந்து பெண் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
சிவகங்கை,
மின்னல் தாக்கி கணவர் இறந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி கண்பார்வையற்ற மகன், மகளுடன் வந்து பெண் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சிவகங்கை காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண் தன்னுடைய கண் தெரியாத மகள் மற்றும் மகனுடன் வந்து மனு ஒன்றை கலெக்டரிடம் கொடுத்தார். அதில் தன்னுடைய கணவர் பாண்டி பிளம்பர் வேலை செய்து வந்தார். கடந்த 1-ந்தேதி மாலையில் திடீரென்று மின்னல் தாக்கியதில் கணவர் இறந்துவிட்டதாகவும், தனது மகள் மற்றும் மகன் இரண்டு பேரும் பி.ஏ. படித்திருப்பதாகவும் 2 பேருக்குமே கண் பார்வை தெரியாது என்றும் தன்னுடைய கணவருடைய வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் அவர் இறந்து போய் விட்டதால் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தன்னுடைய மகனுக்கு ஏதாவது வேலை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இதை தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி அவருடைய கணவர் மின்னல் தாக்கி இறந்ததற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும் என்றும் அவருடைய மகனுக்கு வேலை தருவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வங்கிக்கடன், குடும்ப அட்டை வழங்க கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 331 பேர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.பின்னர் 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story