பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்
பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் இரவு நேரத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் ஊரணியில் இருந்து பால்குடம், காவடி, அக்னிசட்டி, கரகம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து மதியம் கோவில் முன்பு கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. நேற்று இரவு கோவில் முன்பு உள்ள கலையரங்கத்தில் வள்ளி திருமணம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது. விழாவில் ஆம்பூர்பட்டி, நால்ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story