பாளையங்கோட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை
பாளையங்கோட்டையில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
குடிநீர் பிரச்சினை
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாந்திநகர் 6 மற்றும் 7 வார்டுகளில் உள்ள சுமார் 15 தெருக்களில் கடந்த 2 ஆண்டுகளாக சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் குடிநீருடன் அசுத்தம் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதையடுத்து அந்த பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலையில் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு பகுதியில் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அசுத்தமான நிலையில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை 2 குடங்களில் கொண்டுவந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான பஸ்களும், வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை பகுதிக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க திட்டம் தயாரித்து மாநகராட்சி கூட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story