வலை- உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்


வலை- உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 10 May 2022 1:12 AM IST (Updated: 10 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைகாலத்தையொட்டி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சேதுபாவாசத்திரம்:
மீன்பிடி தடைகாலத்தையொட்டி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். 
மீன்பிடி தடை காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி மீன்பிடி தடை காலம் தொடங்கி,  கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. 
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். 
கால அவகாசம் இல்லை
ஆண்டு முழுவதும் மீனவர்கள் இடைவெளியின்றி மீன்பிடிக்க கடலுக்கு செல்வதால், படகுகளையோ, வலைகளையோ, மற்ற உபகரணங்களையோ சீரமைக்க மீனவர்களுக்கு போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. 
இதனால் மீனவர்கள் தடை காலத்தை படகு, வலை மற்றும் உபகரணங்களை சீரமைத்து, பழுதுபார்க்க பயன்படுத்தி கொள்கிறார்கள். சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 246 விசைப்படகுகள் இருந்தன. 
படகுகள்-வலைகள்
கஜா புயலில் பல படகுகள் சேதம் அடைந்த நிலையில் 146 விசைப்படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள தடை காலத்தை பயன்படுத்தி சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களுடைய படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பது, பழுது நீக்குவது போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தடை காலம் முடிந்து உடனடியாக கடலுக்கு சென்று தொழிலை தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக மீனவர்கள் கூறினர். 

Next Story