திருச்சிற்றம்பலம் பகுதியில் செல்போன் சேவைகள் பாதிப்பு
திருச்சிற்றம்பலம் பகுதியில் செல்போன் சேவைகள் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் பகுதியில் செல்போன் சேவைகள் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செல்போன் சேவை பாதிப்பு
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் அண்மை காலமாக பி.எஸ்.என்.எல். சேவைகள் முழுமையாக கிடைப்பதில்லை. தனியார் நிறுவனத்தின் சேவைகள் அவ்வப்போது கிடைத்தாலும், அதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது.
குறிப்பிட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் போது உடனடியாக தொடர்பு கிடைப்பதில்லை. அவ்வாறு தொடர்பு கிடைத்தாலும் உடனடியாக துண்டிக்கப்பட்டு விடுகிறது.
பொதுமக்கள் அவதி
பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிக்கிறது. ஆனால், அலைபேசி அழைப்புகளில் உடனடியாக தொடர்பு கிடைப்பதில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது.
திருச்சிற்றம்பலத்தை சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. அவசர காலங்களில் மருத்துவ உதவி பெறுவதற்கும், பிற தேவைகளுக்காகவும் செல்போனில் தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தரமான சேவைகளை வழங்க வேண்டும்
குறிப்பாக மின்தடை ஏற்படும் நேரங்களில் செல்போன் சேவையும் முடங்கி விடுகிறது. மீண்டும் மின்தடை நீங்கிய பிறகே செல்போன் சேவையும் தொடர்கிறது. எனவே அனைத்து செல்போன் நிறுவனங்களும் மக்களுக்கு தரமான சேவைகளை வழங்க முன்வரவேண்டும் என்பதே செல்போன் வாடிக்கையாளர்களின் கோரிக்கை ஆகும்.
Related Tags :
Next Story