பணத்துக்காக தொழில் அதிபர் படுகொலை
தொழில் அதிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய வளர்ப்பு மகள், கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தொழில் அதிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய வளர்ப்பு மகள், கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் அதிபர்
மதுரை தல்லாகுளம் சின்னசொக்கிகுளம் கமலா 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாராம்(வயது 74). பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகள் நடத்தி வந்தார். இவரது மனைவி பங்கஜவள்ளி(73). இவர்கள் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கும் விட்டுள்ளனர்.
மேலும் பங்கஜவள்ளி நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். எனவே கிருஷ்ணாராம்தான் கடை வாடகை வசூலிக்க, சாப்பாடு வாங்க என அனைத்திற்கும் வெளியே சென்று வந்துள்ளார். இரவு நேரத்தில் அவர், தனது வீட்டின் முதல் தளத்திலும்,. அவரது மனைவி தரைதளத்தில் தூங்குவது வழக்கம்.
நேற்று காலை 8 மணி ஆகியும் கிருஷ்ணராம் கீழே வராமல் இருந்துள்ளார். பங்கஜவள்ளியால் படி ஏற முடியாத காரணத்தினால், கடைக்காரர் ஒருவரை அழைத்து தனது கணவர் என்ன செய்கிறார் என்று பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
கத்தியால் குத்திக் கொலை
அவரும் மாடிக்கு சென்று கதவை தட்டி பார்த்த போது எவ்வித சத்தம் இல்லை. எனவே கதவை தள்ளி உள்ளே பார்த்த போது அங்குள்ள படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணராம் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பங்கஜவள்ளியிடம் கூறிவிட்டு தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிருஷ்ணராம் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி பங்கஜவள்ளி, வாடகைக்கு கடை நடத்துபவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் அந்த தெருவில் கடைசி வரை சென்று நின்றுவிட்டது. இதற்கிடையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஒரு பெண், ஆண் ஆகியோர் வீட்டிற்குள் செல்வது தெரியவந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பெண் குழந்தை தத்தெடுப்பு
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்தன.. அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணராமுக்கு குழந்தை இல்லை. ஆரம்பத்தில் கீழச்சித்திரை வீதியில் பாத்திரக்கடை வைத்துள்ளனர். பின்னர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை சுற்றிலும் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் வீடுகளை கட்டி வாடகை விட்டு வந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் வந்ததாக கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் சொத்து இருந்தும் தங்களை கவனிக்க குழந்தை இல்லாத ஏக்கம் அவர்களிடம் இருந்தது. எனவே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானலில் பிறந்த பெண் குழந்தையை 2004-ம் ஆண்டு தத்தெடுத்து அந்த குழந்தைக்கு நிவேதா என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தனர். 8-ம் வகுப்பு வரை படித்த அந்த பெண் அதன் பின்பு பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் வயதான பெற்றோராக இருப்பதால் நிவேதா தான் கடை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வந்துள்ளார். மேலும் அவர் டிக்-டாக் போன்றவை செய்து அதனை செல்போனில் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு நண்பர்கள் அதிகமானால் அவர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதல் திருணம்
இந்த நிலையில் நிவேதா, ஓட்டலில் வேலை பார்த்த ஹரிகரன்(23) என்பவரை காதலித்தார். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கிருஷ்ணராம் மகளை வீட்டில் சேர்க்கவில்லை. எனவே அவர்கள் தனியாக வசித்து வந்தனர். பின்னர் அவர் சமரசமாகி கடந்த மார்ச் மாதம் அவர்களை வீட்டில் சேர்ந்துகொண்டார்.
மேலும் மகள், மருமகனுக்கு தனது வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து கொடுத்து தங்களுடன் தங்க வைத்து கொண்டார். ஆனால் அவர்கள் சரியாக கடையை திறக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று காலை 10 மணி ஆகியும் அவர்கள் கடையை திறக்கவில்லை. இதை பார்த்த கிருஷ்ணராம் அவர்களை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிவேதா, அவரை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் கீழே விழுந்த கிருஷ்ணராமுக்கு 2 பற்கள் உடைந்தன. அதில் தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டை விட்டு வெளியேற்றினார்.
சொத்தை டிரஸ்டுக்கு எழுதி வைப்பேன்
கடந்த 5-ந் தேதி நிவேதா தனது தந்தைக்கு போன் செய்து கார் வாங்கி தொழில் செய்ய பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் மகளிடம் உனக்கு பணம் கொடுக்க மாட்டேன், தனது சொத்தை தனியாக டிரஸ்ட் ஆரம்பித்து அதற்கு எழுதி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நிவேதா தனது தந்தையை கொலை செய்ய கணவருடன் சேர்ந்து திட்டமிட்டார். உடனே ஹரிகரன் சிவகங்கையை சேர்ந்த நண்பரின் தம்பியிடம் இதுகுறித்து கூறி கொலைக்கான திட்டத்தை வகுத்தனர்.
கணவருடன் பெண் சிக்கினார்
அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் நிவேதா, கணவரின் நண்பரின் தம்பியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கிருஷ்ணராமிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் கத்தியால் கிருஷ்ணராமை கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்க மோதிரம், சங்கிலி, 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காரைக்குடியில் பதுங்கி இருந்த நிவேதா, அவரது கணவர் ஹரிகரனை பிடித்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story