ஆத்தூர் அருகே பரபரப்பு ஒப்பந்ததாரரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அதிரடி கைது சாலை பணியை ஒதுக்க ரூ.78 லட்சம் பேரம் பேசியது அம்பலம்


ஆத்தூர் அருகே பரபரப்பு ஒப்பந்ததாரரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அதிரடி கைது சாலை பணியை ஒதுக்க ரூ.78 லட்சம் பேரம் பேசியது அம்பலம்
x
தினத்தந்தி 10 May 2022 2:27 AM IST (Updated: 10 May 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். சாலை பணியை ஒதுக்க ரூ.78 லட்சம் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர், 
நெடுஞ்சாலை பணிகள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், வீரகனூர் ஊராட்சியில் தெடாவூர் கிராமத்தில் இருந்து தம்மம்பட்டி வரை தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6 கோடியே 93 லட்சம் டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இதனை அறிந்த ஆத்தூர் அருகே வீரகனூர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜன் (வயது 60) என்பவர், ஆத்தூரில் உள்ள உதவி கோட்ட என்ஜினீயர் சந்திரசேகரன் (54) என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, தெடாவூர்- தம்மம்பட்டி சாலை பணியை தனக்கு ஒதுக்குமாறு அவர் கேட்டார். அதற்கு சந்திரசேகரன், 12 சதவீதம் கமிஷன் தொகை அதாவது ரூ.78 லட்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன் முதலில் யோசனை செய்ததாகவும், பின்னர் 12 சதவீதம் கமிஷன் தொகையை தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
முதலில் ரூ.3½ லட்சம் 
கமிஷன் தொகை ரூ.78 லட்சத்தில் முதலில் ரூ.3½ லட்சம் தருவதாகவும், பணிகளை ஒதுக்கி தந்த பிறகு, சாலை பணியை முடித்து விட்டு மீதி பணத்தை தருவதாகவும் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். அதற்கு சந்திரசேகரன் சம்மதம் தெரிவித்து ஒரு வெள்ளை தாளில் ஸ்டாம்பு ஒட்டி சுந்தர்ராஜனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் சுந்தர்ராஜன் மன வேதனை அடைந்தார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் ேசலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டார். இதையடுத்து அவர்கள், சந்திரசேகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதிரடியாக சிக்கினார்
உடனே லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், சுந்தர்ராஜனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதனை வாங்கிக்கொண்ட சுந்தர்ராஜன், ஆத்தூர் பயணியர் மாளிகை பின்புறம் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சந்திரசேகரனை சந்தித்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 3½ லட்சத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்து சந்திரசேகரனை கையும், களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் சந்திரசேகரன் செய்வதறியாது திகைத்தார். பின்னர் போலீசார் அந்த ரூ.3½ லட்சத்தை கைப்பற்றினர். சந்திரசேகரனை கைது செய்து அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மாலை 4 மணியில் இருந்து இரவு வரை இந்த விசாரணை நீடித்தது.
சேலத்தில் சோதனை
சந்திரசேகரனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அதாவது, லஞ்சம் வாங்கிய பணத்தை சந்திரசேகரனும், சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேசும் பங்கிட்டு வந்ததாக தெரிகிறது. சுந்தர்ராஜனிடம் லஞ்சமாக கேட்ட பணமும் இருவருக்கும்தான் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம்
அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். இதைக்கண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர். அவருக்கு ரூ.81 ஆயிரம் எப்படி கிடைத்தது?, அது லஞ்ச பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று மாலையில் 5 மணி அளவில் தொடங்கி இரவு வரை நீடித்தது. 
ரூ.6 கோடியே 93 லட்சம் சாலை பணிக்கு ரூ.78 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story