நங்கவள்ளி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


நங்கவள்ளி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 10 May 2022 3:20 AM IST (Updated: 10 May 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி திரவுபதி அம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேச்சேரி

கோவில் திருவிழா
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நங்கவள்ளியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. மகாபாரத நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இங்கு விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 22-ந் தேதி சக்தி கரகம் எடுத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பக்காசூரன் வதம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் நங்கவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரத்தினவேல், பீமசேனன் வேடமணிந்து பக்கா சூரனை வதம் செய்தார்.
திருக்கல்யாணம்
நேற்று காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிருஷ்ணன், பஞ்சபாண்டவர்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது பின்னர் அம்மன் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி விழாவின் தொடக்கமாக அக்னி குண்டம் அமைக்கும் பணி நடந்தது. இதன் ஒரு பகுதியாக கோவிலின் அருகே மகாபாரத நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முதலில் அர்ச்சுனன் தவசு, நல்ல அரவான் கட பலி, நடந்தது. பின்னர் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தீ மிதி விழா
அதேநேரத்தில் அர்ச்சுனன் மாடுபிடி சண்டை, கோட்டை சண்டை, வாணவேடிக்கை பீமசேனனால் துரியோதனன் வதம், திரவுபதி கூந்தல் முடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7 மணி அளவில் தீமிதி விழா தொடங்கியது இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் சாமி வீதி உலா நடந்தது.


Next Story