சிவகிரி அருகே பரபரப்பு ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகளை துரத்திய மர்ம விலங்கு; சிறுத்தையா? வனத்துறையினர் விசாரணை
சிவகிரி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய், மகளை மர்ம விலங்கு துரத்தியது. அது சிறுத்தையா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி
சிவகிரி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய், மகளை மர்ம விலங்கு துரத்தியது. அது சிறுத்தையா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்ம விலங்கு துரத்தியது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் செங்காளி காட்டுபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி அனிதா (வயது 35). மகள் யாழினி (10).
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனிதாவும், யாழினியும் செங்காளிகாட்டுப்புதூரில் இருந்து தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். பின்னர் இரவு 7.30 மணி அளவில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். ஸ்கூட்டரை அனிதா ஓட்டினார். யாழினி பின்னால் உட்கார்ந்து வந்தார்.
அரசு மேல்நிலைப்பள்ளியை தாண்டி கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஸ்கூட்டர் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென ஒரு மர்ம விலங்கு ஸ்கூட்டரை துரத்தியுள்ளது.
உடலில் வரி வரி கோடுகள்
ஏதோ பின்னால் சத்தம் கேட்கிறதே என்று யாழினி திரும்பி பார்த்தபோது ஒரு மர்ம விலங்கு ஸ்கூட்டரை நோக்கி பாய்ந்து வருவது தெரிந்தது. இதனால் பயத்தில் அலறி துடித்த அவர், அம்மா ஸ்கூட்டரை வேகமாக ஓட்டுங்க ஏதோ விலங்கு துரத்கிறது என்று அனிதாவிடம் சொல்லியுள்ளார். இதனால் அனிதாவும் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டியுள்ளார்.
வண்டியை ஓட்டிக்கொண்டே பக்கவாட்டு கண்ணாடியில் அனிதா பார்த்தபோது அரைகுறை வெளிச்சத்தில் துரத்துவது என்ன விலங்கு என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் ஊஞ்சக்காட்டுவலசு என்ற இடத்தில் எதிரே ஒரு கார் வந்தது. அந்த வெளிச்சத்தில் அனிதாவும், யாழினியும் திரும்பி பார்த்தபோது துரத்திய விலங்கின் உடலில் வரி வரியாக கோடுகள் இருந்ததை பார்த்துள்ளனர். அதே நேரம் காரின் முன்பக்க வெளிச்சம் பட்டதும் துரத்திய மர்ம விலங்கு ரோட்டு ஓரம் இருந்த ஒரு கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து மறைந்து விட்டது.
சிறுத்தையா?
இதையடுத்து அனிதா மகளுடன் அலறி அடித்து வீடு வந்து சேர்ந்தார். பின்னர் இதுபற்றி கணவர் கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அனிதாவும், யாழினியும் நடந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறினார்கள். அதனால் சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் திரண்டு விட்டார்கள். பின்னர் இதுபற்றி ஈரோடு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனிதாவிடமும், யாழினியிடமும் நடந்ததை கேட்டறிந்தார்கள். அப்போது அவர்களிடம் இருவரும், துரத்திய விலங்கு சுமார் 2 அடி உயரம் இருக்கும். உடலில் வரி வரியாக கோடுகள் இருந்தன. ஆனால் வெளிச்சம் குறைவாக இருந்ததால் எங்களால் முழுமையாக பார்க்க முடியவில்லை. அது சிறுத்தையாக இருக்கலாம் என்று கூறினார்கள்.
கோவிலில் ரத்தம் குடித்தது
இதற்கிடையே சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஊஞ்சக்காட்டுவலசு அருகே கரும்பு தோட்டத்துக்குள் நல்லகட்டி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த கோவிலில் பக்தர்கள் கிடாய் வெட்டி பலிகொடுத்துள்ளனர். அன்று இரவு கிடாய் வெட்டிய இடத்தில் சிந்தியிருந்த ரத்தத்தை ஏதோ ஒரு மர்ம விலங்கும், அதன் அருகே ஒரு குட்டி விலங்கும் நின்று குடித்துக்கொண்டு இருந்துள்ளது. அதை கோவிலுக்குள் இருந்து பூசாரி தண்டபாணி பார்த்துள்ளார். இதுபற்றி அருகே தூங்கிக்கொண்டு இருந்த மகனை எழுப்பி காட்டியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சத்தம் போட்டதும் மர்ம விலங்குகள் அங்கிருந்து சென்றுவிட்டன. அதன்பின்னர் ஒரு நாள் கோவில் அருகே உள்ள கரும்பு தோட்டத்து வாய்க்காலில் மர்ம விலங்கு ஒன்று தண்ணீர் குடித்ததை பார்த்தேன். அதனால் 2 முறை நான் பார்த்ததும் சிறுத்தையாக இருக்கலாம் என்று தண்டபாணியும் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமரா
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடங்களில் பதிவாகியிருந்த கால் தடத்தை பதிவு செய்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கூறும்போது, கால்தடத்தை முழுமையாக ஆய்வு செய்தால்தான் வந்தது என்ன விலங்கு என்று தெரியவரும். ஆனால் இந்த பகுதியில் சிறுத்தை, புலி நடமாட வாய்ப்பு இல்லை. எனினும் நடமாடியதாக கூறப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கிறோம். அதேபோல் ரத்தம் குடிக்க வந்ததாக கூறப்படும் நல்லகட்டி அம்மன் கோவில் முன்பும் கிடாய் ரத்தத்தை ஊற்றி வைத்து இரவில் கண்காணிக்கிறோம். அவ்வாறு வந்தது சிறுத்தை என்று கண்காணிப்பு கேமராவில் உறுதி செய்யப்பட்டால், உடனே கூண்டு அமைத்து அதை பிடித்துவிடுவோம். அதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். அதேநேரம் இப்பகுதியில் இரவு நேரத்தில் தனியாக யாரும் நடமாடவேண்டாம் என்று வனத்துறையினர் கூறினார்கள்.
வனப்பகுதி ஏதும் அருகே இல்லாமல் மஞ்சள் மற்றும் கரும்பு தோட்டங்கள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் சிறுத்தை போன்ற ஒரு மர்ம விலங்கு ஸ்கூட்டரில் சென்ற தாய், மகளை துரத்திய சம்பவம் சிவகிரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story