கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்கக்கோரி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்கக்கோரி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 10 May 2022 4:22 AM IST (Updated: 10 May 2022 4:22 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்கக்கோரி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்கக்கோரி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சீரமைப்பு பணி
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும், 40 ஆயிரம் ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலினை சீரமைக்கும் திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், மற்றொரு தரப்பு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருவதால் திட்டப்பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்கங்கள் மற்றும் கடைமடை பாசன சபையை சேர்ந்த விவசாயிகள் நேற்று, ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள கீழ் பவானி வடிகால் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.709 கோடி மதிப்பீடு
இதைத்தொடர்ந்து அவர்கள் செயற்பொறியாளரிடம் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கீழ்பவானி வாய்க்கால் மிகவும் பலவீனமடைந்து தண்ணீர் செலுத்தும் திறனை இழந்து விட்டது என 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நீரியல் வல்லுனர் மோகனகிருஷ்ணன் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, கீழ் பவானி வாய்க்காலினை சீரமைத்து வலுப்படுத்த நபார்டு வங்கியில் ரூ.709 கோடி மதிப்பீட்டில் கடன் பெற்று திட்டத்தினை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு அரசியல் காரணங்களால் வேலைகள் தடைபட்டது. கடந்த ஆண்டு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் நிறுத்தப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்த ஆண்டு கடந்த மாதம் 30-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது. 10 நாட்கள் கடந்த நிலையிலும் நீர்வளத்துறை திட்டவட்டமான முடிவுகள் எடுத்து சீரமைப்பு வேலைகளை தொடங்காமல் இருப்பது ஆயக்கட்டு விவசாயிகளை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.
தண்ணீர் திறக்க நடவடிக்கை
நீர்வளத்துறை சீரமைப்பு வேலைகளை தொடங்குவதற்கு, ஆயக்கட்டு பாசனத்தில் தொடர்பில்லாத சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் நெருக்கடி காரணமாக கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நீர்வளத்துறை, கீழ் பவானி வாய்க்காலின் சீரமைப்பு பணிகளை தாமதமின்றி தொடங்கி, வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
விரைந்து முடிக்கப்படும்
மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் கீழ் பவானி வடிகால்கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், விவசாயிகள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. பெருந்துறை மேட்டுக்கடை அருகே கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story