வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்


வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
x
தினத்தந்தி 10 May 2022 4:32 AM IST (Updated: 10 May 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது.

தா.பழூர்:

பிரம்மோற்சவம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் ஹஸ்த நட்சத்திர நாளில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. பின்னர் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட பிறகு 2021-ம் ஆண்டு பிரம்மோற்சவம் ஐப்பசி மாத ஹஸ்த நட்சத்திரத்தின்போது நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்த ஆண்டு வழக்கம்போல் சித்திரை மாத அஸ்த நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
அதன்படி முதல் நாளான நேற்று காலை துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உபய நாச்சியார்கள் சமேத உற்சவ மூர்த்திக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருளி சேவை சாதித்தார். மாலை சந்திர பிரபையில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பரமபதநாதன் திருக்கோலம்
இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பல்லக்கு புறப்பாடு, மாலையில் சேஷ வாகன பரமபதநாதன் திருக்கோலம் ஆகியவை நடைபெற உள்ளது. மூன்றாம் நாளான நாளை(புதன்கிழமை) காலை கருட சேவை, மாலை அனுமந்த சேவை, நான்காம் நாளன்று காலை வெண்ணைத்தாழி புறப்பாடு, மாலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடு, ஐந்தாம் நாளன்று காலை திருத்தேர் உற்சவம், தீர்த்தவாரி, மாலையில் புஷ்பயாகம் மற்றும் துவஜ அவரோகணம் (கொடி இறக்கம்), ஆறாம் நாள் காலை விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.

Next Story