ஈரோடு மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
குவியும் குப்பை
ஈரோடு மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை சேருவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 60 வார்டுகளிலும் குப்பைகள் சேர்ந்து வருகின்றன. குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணியில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரம் மாநகராட்சியை தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து வீதிகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. தூய்மை பணியாளர்கள் அந்தந்த வீதிகளில் குப்பைகளை சேகரித்தும் வருகிறார்கள். ஆனால், பலர் குப்பை வாகனங்களில் கழிவுகளை போடாமல், பொட்டலமாக கட்டி பொது இடங்களில் வீசி வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
அக்கறை
குறிப்பாக வீடுகள் இல்லாத பொது இடங்கள், மைதானங்கள், நீர் நிலைகளில் பலரும் சமூக அக்கறை இன்றி குப்பைகளையும் கழிவுகளையும் வீசி செல்கிறார்கள். தங்கள் வீடுகளில் உள்ள கழிவுகள் வெளியேறினால் போதும் என்று அடுத்த வீதிகளில் கொண்டு வீசுவது வாடிக்கையாகி விட்டது. இதுபோல் பல்வேறு கழிவுகளையும் முறைப்படி அகற்றாமல், சக மனிதர்களைப்பற்றி அக்கறை இல்லாமல் பொது இடங்களிலும், சாலைகளிலும், மைதானங்களிலும் போட்டு செல்கிறார்கள்.
இவ்வாறு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-7 வீட்டு மனைப்பிரிவு பகுதியில் உள்ள காலி இடங்கள், ரோடுகளில் பலரும் குப்பைகள், கழிவுகளை கொண்டு குவிப்பது வழக்கமாக இருந்தது. குடிமகன்களும் மதுக்குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தூய்மை பணி
இதுதொடர்பான புகார் ‘தினத்தந்தி’யில் செய்தியாக வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அங்கு தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வழக்கம்போல குப்பைகளுடன் வந்தனர். அவர்களை தூய்மைப்பணியாளர்கள் எச்சரித்து அனுப்பினார்கள். அதுமட்டுமின்றி, குப்பைகளை சேகரிக்கும் வகையில் அந்த பகுதியில் குப்பை தொட்டி ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியை குப்பை தொட்டி இல்லாத மாநகராக உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் போட வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியும் சில இடங்களில் குப்பை போடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
எச்சரிக்கை
இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. யாராவது பொது இடங்களில் குப்பை போட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
வீதிகள் தோறும் வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். ஏதேனும் வீதிகளுக்கு குப்பை வண்டி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். அதை விடுத்து அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story