போலீஸ் நிலையங்களில் நடக்கும் சாவு குறித்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
போலீஸ் நிலையங்களில் நடக்கும் சாவு குறித்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
“போலீஸ் நிலையங்களில் நடக்கும் சாவு குறித்த உண்மை நிலையை கண்டறிய தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகும் நிலை மக்கள் போராட்டத்தால் நடந்து உள்ளது. மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கை வாழ் மக்கள் உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறார்கள். இனவெறியால் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.
இது பிறநாடுகளுக்கும், இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை ஆகும். அங்கே மொழி வெறி, இனவெறி, ஒரே ஆட்சி நிர்வாகம் என்று ஒற்றை இலக்கை நோக்கி ராஜபக்சே குடும்பம் அழைத்து சென்றது. அதே நிலைக்குதான் மோடி அரசும் இந்தியாவை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது. இதனால் இலங்கையில் நிகழ்ந்தவை இந்தியாவிலும் நிகழும் என்று ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
விசாரணை ஆணையம்
போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தாக்கப்பட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் உண்மை தன்மையை கண்டறிய அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தி.மு.க. அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தரும் என்று ஆசிரியர்கள் ஆதரவு நல்கி உள்ளார்கள். கட்டாயம் அதனை நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியில் மோடி அரசு நீடித்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதில்தான் கவனமாக இருக்கிறார். ஏழை, எளிய மக்கள் மீது கவலை இல்லை. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு மோடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஒன்று சேர வேண்டும்
பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அகில இந்திய அளவில் அணிதிரள வேண்டிய நேரம் இது. பா.ஜனதா கட்சியை தனிமைப்படுத்தும் வகையில் கட்சிகள் ஒன்று சேர முன்வர வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜனதா எதிர்க்கட்சியாக வர முயற்சிக்கிறது. அவர்களால் அந்த இடத்தை பிடிக்க முடியாது. அதில் அ.தி.மு.க.தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story