கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க முடியாது- மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 29 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்த மும்பை ஐகோர்ட்டு, அவளுக்கு ரூ.50 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.
மும்பை,
கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 29 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்த மும்பை ஐகோர்ட்டு, சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.
அனுமதி மறுப்பு
மும்பை ஐகோர்ட்டில் கற்பழிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தந்தை மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அவர் மனுவில், தனது மகளின் 29 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, மாதவ் ஜாம்தார் ஆகியோா் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
இதில் நீதிபதிகள் கருவை கலைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மருத்துவ குழுவினரிடம் பரிந்துரை கேட்டு இருந்தனர். சிறுமியை சோதனை நடத்திய ஜே.ஜே. மருத்துவ குழுவினர், இந்த தருணத்தில் சிறுமியின் கருவை கலைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்தனர்.
ரூ.50 ஆயிரம் நிவாரணம்
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாய் இல்லாததால், பிரசவத்தின் போது அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கவும், மேலும் பிரசவம் வரையிலும், பிரசவம் முடிந்து தேவையான காலம் வரை காஞ்சூர்மார்க்கில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து பார்த்து கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிறுமிக்கு 10 நாட்களுக்குள் ரூ.50 ஆயிரத்தை இடைக்கால நிவாரணமாக வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story