உடுமலை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப்பிரிவில் பல்வேறு மூலிகைச் செடிகளை அறிமுகம்
உடுமலை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப்பிரிவில் பல்வேறு மூலிகைச் செடிகளை அறிமுகம்
போடிப்பட்டி,
உடுமலை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப்பிரிவில் பல்வேறு மூலிகைச் செடிகளை அறிமுகப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பாட்டி வைத்தியம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை கற்பூரவள்ளி, கறிவேப்பிலை, வெற்றிலை, வல்லாரை, துளசி, தூதுவளை என்று ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான மூலிகைச்செடிகள் இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியால் நோய்களைத் தீர்க்க புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் அதேநேரத்தில் புதுப்புது நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அன்றைய பாட்டி வைத்தியத்தில் எல்லாவிதமான நோய்களும் குணமானது.
அதற்கு நமது முன்னோர்கள் மூலிகைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் அறிந்திருந்தது முக்கிய காரணமாகும். ஆனால் காலப்போக்கில் மூலிகைகளை மறந்து விட்டு ஆங்கில மருத்துவத்தில் தினம் தினம் பல வண்ணங்களில் மாத்திரைகளை விழுங்கும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
இந்தநிலையில் இளைய தலைமுறைக்கு மூலிகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் உடுமலை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவப் பிரிவில் பலவிதமான மூலிகைகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். அத்துடன் ஒவ்வொரு மூலிகையிலும் அதன் பெயர் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கிய அட்டைகளை வைத்துள்ளார்கள். இதுகுறித்து சித்த மருத்துவர் லட்சுமிபதி ராஜ் கூறியதாவது:-
ஞாபக சக்திக்கு வல்லாரை, இருமல், இளைப்பு தீர வெற்றிலை, சுவையின்மை நீங்கி பசி உண்டாக கறிவேப்பிலை, சிறுநீர் கற்களைக் கரைக்க ரணகள்ளி என்று ஒவ்வொரு நோய்க்கும் தீர்வு காண ஒவ்வொரு மூலிகை உள்ளது. எளிதில் கிடைக்கக் கூடிய இத்தகைய மூலிகைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூலிகைகளை காட்சிப்படுத்தியிருக்கிறோம். அத்துடன் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் ஒன்றும் இங்கே செயல்படுகிறது. விருப்பப்படுபவர்கள் இந்த புத்தகங்களைப் படித்து சித்த மருத்துவத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்'என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story