கெட்டுப்போன 175 கிலோ மீன்கள் அழிப்பு
கெட்டுப்போன 175 கிலோ மீன்கள் அழிப்பு
பல்லடம்:
பல்லடம், பொங்கலூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து கெட்டுப்போன 175 கிலோ மீன் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
175 கிலோ மீன் அழிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் மீன் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பல்லடம் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகள், பொங்கலூர் வட்டார பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகள் மற்றும் பொரித்த மீன் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கெட்டுப்போன மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் 175 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீன் கடைகளில் சரியான வெப்பநிலையை காட்டும் குளிர்சாதன பெட்டியில் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். சமைத்த மீன் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைப்பது, மீண்டும் சூடுபடுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதுபோன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
சிவப்பு நிறம்
மேலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மீன்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். நீண்டநாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. மீன் எங்கிருந்து வாங்கப்படுகிறது என்ற ரசீதை வைத்திருக்க வேண்டும். மீன் வெட்டும் கத்தி, அரிவாளை துருபிடிக்காத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பொரித்து விற்கப்படும் மீன்களுக்கு எந்தவித செயற்கை வண்ணங்கள் சேர்க்கக்கூடாது. மீன்களில் இருக்கும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சமைப்பதற்கு பொதுமக்கள் மீன்கள் வாங்கும்போது, மீன்களின் கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். மீன்களின் செவில்கள் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். கருப்பு நிறமாக, சாம்பல் நிறமாக இருந்தால் அந்த மீன்களை தவிர்க்க வேண்டும். மீன்களின் வயிற்றுப்பகுதியை கைவிரல்களால் அழுத்திய பிறகு கையை எடுத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். துர்நாற்றம் இல்லாத மீன்களை வாங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story