கொள்ளிடம் அருகே மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது
கொள்ளிடம் அருகே மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதில் இருந்து வெளியேறிய டீசலை பொதுமக்கள் பாட்டில்களில் பிடித்து சென்றனர்.
கொள்ளிடம்:-
கொள்ளிடம் அருகே மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதில் இருந்து வெளியேறிய டீசலை பொதுமக்கள் பாட்டில்களில் பிடித்து சென்றனர்.
மணல் குவாரி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பாலூரான்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி இயங்கி வருகிறது.
இந்த மணல் குவாரிக்கு புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரி 6 ஆயிரம் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு நேற்று புதுச்சேரியில் இருந்து வந்து கொண்டிருந்தது.
கவிழ்ந்தது
கொள்ளிடத்தில் இருந்து குவாரிக்கு செல்லும் வழியில் பூங்குடி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு உள்ள வயலில் கவிழ்ந்தது.
இதில் லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த செந்தில் காயம் அடைந்தார். அவருக்கு சிதம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கவிழ்ந்து கிடந்த லாரியை மணல் குவாரி ஊழியர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
டீசல் வெளியேறியது
அப்போது டேங்கர் லாரியில் இருந்து சிறிதளவு டீசல் வெளியேறியது. அதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பாட்டில்கள், கேன்களில் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சென்றனர். இதையடுத்து டீசல் வெளியேறியதை ஊழியர்கள் உடனடியாக நிறுத்தினர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story