அடகு கடையில் போலி நகையை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி


அடகு கடையில் போலி நகையை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 May 2022 9:42 PM IST (Updated: 10 May 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

அடகு கடையில் போலி நகையை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர், மற்றோருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அடகு கடை

திருவள்ளூர், வேப்பம்பட்டு சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40). இவர் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மணி, முருகன் ஆகிய 2 பேர் கடந்த மாதம் 23-ந் தேதி வந்துள்ளனர். அவர்கள் அதே பகுதி விலாசத்தை கொடுத்து ஒரு மோதிரத்தை அடகு வைத்து பணத்தைப் பெற்று கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் கடந்த வாரம் மீண்டும் அடகு கடைக்குச் சென்று மோதிரத்தை மீட்டுள்ளனர். அப்போது தங்க சங்கிலியை விற்க வேண்டும் என கூறி 4 பவுன் ஒரிஜினல் சங்கிலியை அசோக்குமாரிடம் கொடுத்துள்ளனர். அசோக்குமார் பரிசோதனை செய்து விட்டு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு மீண்டும் தங்க சங்கிலியை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கவரிங் சங்கிலியை அசோக்குமாரிடம் கொடுத்து விட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றுவிட்டு மணி மற்றும் முருகன் அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் சென்ற பிறகு மீண்டும் அசோக்குமார் அந்த சங்கிலியை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

ஒருவர் கைது

இந்த நிலையில் சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது. கைது செய்யபட்ட முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரூ.90 ஆயிரம் பணத்துடன் தலைமறைவாக உள்ள மணி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story