சித்திரை பூக்குழி திருவிழா


சித்திரை பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 10 May 2022 9:48 PM IST (Updated: 10 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

ராஜராஜேஸ்வரி வடகாசி அம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா நடந்தது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரம் ராஜராஜேஸ்வரி வடகாசி அம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி கால்நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு 18 வகையான நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மேலும் கும்மிப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. 

10-ம் திருநாளான நேற்று மாலை பூக்குழி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து, விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். நேற்று காலை கோவில் முன்புறம் உள்ள திடலில் வேதபாராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்களுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 3 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சப்பரத்தை பின்தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து பிள்ளையார் கோவில் அருகில் புனித நீராடினர். தொடர்ந்து பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அக்னி காவடிகள் வளர்க்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்களும் சப்பரத்தை பின்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பு வளர்க்கப்பட்டுள்ள அக்னி திடலில் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

Next Story